மளிகை பொருட்களுக்கு பணம் கொடுப்பதுபோல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு அண்ணன், தம்பி கைது
பெரும்பாலை அருகே மளிகை கடையில் பொருட்களுக்கு பணம் கொடுப்பதுபோல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ளசாமத்தாள் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சாந்தி (வயது35). இவர் வீட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான முனிராஜ்(35), கண்ணன்(32) மற்றும் இவர்களது நண்பர் அர்ச்சுனன் ஆகிய 3 பேரும் கடைக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளனர்.
பின்னர் அவர்கள் பணம் கொடுக்காமல் சென்றனர். இதனால் சாந்தி பணத்தை கொடுக்குமாறு கூறி உள்ளார். இதனால் 3 பேரும் பணத்தை சாந்தியிடம் கொடுப்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சத்தம் போட்டார்.
அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் முனிராஜ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ், கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அர்ச்சுனனை போலீசார் தேடி வருகின்றனர்.