ராகுல்காந்தி அதிரடி நடவடிக்கை கர்நாடக காங். கமிட்டி கூண்டோடு கலைப்பு மாநில தலைவர் மாற்றம் இல்லை
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெங்களூரு,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
25 தொகுதிகளில் வெற்றி
அக்கட்சி கர்நாடகத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆளும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டே, 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணி 20 ெதாகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் கூறினர்.
காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு
ஆனால் தேர்தலில் கூட்டணி படுதோல்வி அடைந்தது, அக்கட்சிகளின் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதை தினேஷ் குண்டுராவ் மறுத்தார்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
170 நிர்வாகிகள்
இதுகுறித்து அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கலைத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ்குண்டுராவும், செயல் தலைவராக ஈஸ்வர்கன்ட்ரேவும் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டியில் 170 நிர்வாகிகள் வரை உள்ளனர். அவர்கள் அனைவரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் கட்டுப்படுவோம்
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், “கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப் படுேவாம். ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர்களை அவமதித்து பேசினார்.
அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உரிய விசாரணை நடத்தி தவறுகள் செய்திருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பெரும் அதிர்ச்சி
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட இருப்பதால் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.