ரூ.30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாததால் சேலத்தில் தியேட்டருக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ரூ.30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாததால் சேலத்தில் தியேட்டருக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்,
சேலம் மாநகரில் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டும். ஆனால் சேலத்தில் 22 தியேட்டர் உரிமையாளர்கள் இதுவரை தங்களது கேளிக்கை வரியை செலுத்தாமல் உள்ளனர்.
இதன் மூலம் ரூ.80 லட்சம் கேளிக்கை வரி பாக்கி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு மாநகராட்சி சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் தியேட்டர் உரிமையாளர்கள் கேளிக்கை வரி செலுத்த முன்வரவில்லை.
இந்தநிலையில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள 5 தியேட்டருக்கு நேற்று காலை மாநகராட்சி உதவி ஆணையர்(வருவாய்) ராஜா தலைமையில் அதிகாரிகள் வந்தனர். பின்னர் அவர்கள் இந்த தியேட்டரின் உரிமையாளர் ரூ.30 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாததால், அந்த தியேட்டருக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அங்கு பிரச்சினை ஏதும் நடைபெறாமல் இருக்க பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே காலை சினிமா காட்சி பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆனால் அங்கு தியேட்டருக்கு ‘சீல்’ வைத்திருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை அறிந்த ரசிகர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘சேலம் மாநகரில் உள்ள 25 தியேட்டர்களில் 3 தியேட்டர்களின் உரிமையாளர்கள் மட்டுமே கேளிக்கை வரி செலுத்தி உள்ளனர். கேளிக்கை வரி செலுத்துமாறு மற்ற தியேட்டர் உரிமையாளர்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் முதற்கட்டமாக இந்த தியேட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேளிக்கை வரி பாக்கி வைத்துள்ள மற்ற தியேட்டர்கள் மீது ஆணையாளர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.