பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
பாரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைேவற்றப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரி மேற்கு பிரதான வாய்க்கால் தலைமதகின் நீர்மட்டம் 10 அடியாக இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி முதல் பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். பருவமழை பொய்த்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பாரூரில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில், பாரூர் ஏரியில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு அணை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். இதில், பாரூர் ஏரியில் நீர்மட்டம் 11.40 அடியாக உள்ளது. இதனை கணக்கில் கொண்டு முதல் போக பாசனத்திற்காக வருகிற 1-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இதற்காக கருத்துரு தயாரிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 1888-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான ஏரியான பாரூர் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட பின்பு தான் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கால்வாய் கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கெலவரப்பள்ளி அணைக்கு நீர் மேலாண்மை சட்டம் இயற்றி, அதன்படி பாசனம் மேற் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பாரூர் ஏரி நீரினை பயன்படுத்தும் விவசாயிகள், வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.