குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சிங்காரப்பேட்டையில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை,
சிங்காரப்பேட்டை ஜான்கென்னடிநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் சிலர் குடிநீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி நேற்று ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி, வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் அசோகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.