திருவண்ணாமலை அருகே பரபரப்பு, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் தற்கொலை மிரட்டல்

திருவண்ணாமலை அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 2 பேர் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

Update: 2019-06-18 23:00 GMT
திருவண்ணாமலை,

வேலூர் மாவட்டம், திருவலத்தில் இருந்து அரியலூர் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்கம்பிகள் பொருத்தும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை அருகே உள்ள குண்ணுமுறிஞ்சி கிராமத்தில் நேற்று காலை மின்கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதையறிந்த கிராம மக்கள் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம் மற்றும் ஏழுமலை ஆகியோர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் பணிகள் நடக்கிறது. இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர் மின் கோபுரம் உள்ள இடத்தின் உரிமையாளர்களுக்கு ஆண்டு தோறும் வாடகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர்.

முதலில் உயர் மின் கோபுரத்தில் உள்ள 2 பேரும் இறங்கி வாங்க, பின்னர் அலுவலர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் உயர்மின் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்தனர். பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பன்னீர்செல்வமும், ஏழுமலையும் கீழே இறங்கி வந்தனர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்