பெரியாம்பட்டியில், மாணவிகள் திடீர் சாலைமறியல் - மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
பெரியாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவிகள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காரிமங்கலம்,
காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 550 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு வணிகவியல் பிரிவுக்கு போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியையிடம் பல முறை இந்த பிரச்சினை குறித்து பேசி வந்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி பெரியாம்பட்டி பஸ் நிலையம் வந்தனர். பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மாணவிகள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சாலைமறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் பெரியாம்பட்டி வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சிவதாஸ் ஆகியோர் இந்த மறியல் போராட்டம் குறித்து காரிமங்கலம் தாசில்தார் கேசவமூர்த்்திக்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கேசவமூர்த்தி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசி உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.