ஆத்தூரில், தொழில் அதிபர் மகன் காரில் கடத்தல் - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆத்தூரில் தொழில் அதிபர் மகனை காரில் கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதிபுரம் மின்வாரிய பவர் ஹவுஸ் எதிரில் வசிப்பவர் ராஜமாணிக்கம். தொழில் அதிபரான இவர் கர்நாடக மாநிலம் பெல்காமில் கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். மேலும் மல்லியக்கரை பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவருடைய ஒரே மகன் சுரேஷ்குமார் (வயது 35).
இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் இருந்து மல்லியக்கரை பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றுள்ளார். ஆத்தூர் அருகே மோட்டூர் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் அருகே சென்றபோது பின் தொடர்ந்து வேகமாக வந்த ஒரு கார் சுரேஷ்குமார் சென்ற கார் முன்பு நின்று அவரை வழிமறித்தது.
மேலும் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை வெளியே வரும்படி அழைத்தனர். பின்னர் சுரேஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை அடித்து உதைத்து, தங்களது காரில் அந்த கும்பல் கடத்திச்சென்றது.
இது குறித்த தகவலின் பேரில் மல்லியக்கரை போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் சுரேஷ்குமாரின் வீடு, அவர் கடத்தப்பட்ட இடம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர்.
பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பு நிற காரில் ஒரு கும்பல் மதியம் 12 மணியளவில் வந்ததாகவும், அவர்கள் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு, சுரேஷ்குமாரின் வீட்டை உளவு பார்த்ததும் தெரியவந்தது. மேலும் சுரேஷ்குமார் காரில் சென்றதை பார்த்து பின்தொடர்ந்து சென்றதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ்குமாரை கடத்தி சென்ற கார் சேலம் நோக்கி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை கடத்திச்சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சுரேஷ்குமார் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைவாசல் பகுதியில் நேற்றுமுன்தினம் கொம்பாட்டி மணி என்ற தொழில் அதிபர் கடத்தப்பட்ட நிலையில், நேற்று சுரேஷ்குமார் கடத்தப்பட்டது ஆத்தூர், தலைவாசல் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.