மும்பை கமிஷனர் எதிர்ப்பு தெரிவித்த 12 போலீஸ் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் டி.ஜி.பி. உத்தரவு
மும்பை கமிஷனர் எதிர்ப்பு தெரிவித்த 12 போலீஸ் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.;
மும்பை,
மும்பை கமிஷனர் எதிர்ப்பு தெரிவித்த 12 போலீஸ் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
விண்ணப்பம்
மும்பை குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனராக இருந்த தேவன் பாரதி சமீபத்தில் மாநில பயங்கரவாத தடுப்புப்பிரிவு தலைவர் ஆனார். இந்தநிலையில் மும்பையில் பணியாற்றி வரும் சீனியர் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர் என 13 போலீஸ் அதிகாரிகள் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பணி இடமாற்றம் கேட்டுள்ளனர்.
இதில், அவர்கள் பணி இடமாற்றம் கேட்டு நேரடியாக போலீஸ் டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வாலிடம் விண்ணப்பித்து உள்ளனர்.
நோட்டீஸ்
நடைமுறைப்படி பணி இடமாற்றம் பெற விரும்பும் போலீசார் அவர்கள் பகுதி போலீஸ் கமிஷனர் அல்லது போலீஸ் சூப்பிரண்டுவிடமே விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் மூலமாகவே அந்த விண்ணப்பம் டி.ஜி.பி.க்கு அனுப்பப்பட வேண்டும். எனவே பணி இடமாற்றம் கேட்டு நேரடியாக டி.ஜி.பி.யிடம் விண்ணப்பித்த 13 போலீஸ் அதிகாரிகளும் அது குறித்து விளக்கம் அளிக்குமாறு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நோட்டீசுக்கு போலீஸ் அதிகாரிகளும் விளக்கம் அளித்து இருந்தனர்.
பணி இடமாற்றம்
இந்தநிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்த சீனியர் இன்ஸ்பெக்டர்கள் நிதின் அலக்னுரே, தினேஷ் கதம், நந்தகுமார் கோபாலே, ஞானேஸ்வர் வாக், சுதீர் தால்வி, ராஜேஸ் புயர், உமாகாந்த் அட்கி, சந்தோஷ் பாலேகர் உள்ளிட்ட 12 போலீசார் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்த 13 போலீஸ் அதிகாரிகளில் பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஒருவரின் விண்ணப்பம் மட்டும் இன்னும் ஏற்கப்படவில்லை. மும்பை போலீஸ் கமிஷனரால் பணி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட 12 போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. பணி இடமாற்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.