வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

வேளச்சேரியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-18 22:39 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே துறைக்கு கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு 1 ஏக்கர் 15 சென்ட் நிலத்தை வழங்கியது. ஆனால் இந்த இடத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் என 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டி உள்ளனர்.

இந்த கட்டிடங்களை காலி செய்யும்படி ரெயில்வே துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ரெயில்வே இடத்தில் உள்ளவர்கள் காலி செய்ய ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தண்டோரா மூலம் கடைகள், வீடுகள் காலி செய்ய அறிவிப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் வந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 20-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். உடனே தீயணைப்பு துறையினர் வந்து வாலிபரை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்தது. இதனால் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்