பள்ளிப்பட்டு அருகே அம்மன் ஊர்வலத்தில் தீப்பந்தம் பிடித்து வந்தவர் உடல் கருகி சாவு 2 பேர் கைது

அம்மன் ஊர்வலத்தில் தீப்பந்தம் பிடித்து வந்தவர் மீது மது போதையில் இருந்த 2 பேர் விழுந்தனர் இதில் தீப்பந்தம் பிடித்து வந்தவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-18 22:10 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சி.ஜி.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி இரவு கங்கை அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த முனிரத்தினம் (வயது 55) என்பவர் தீப்பந்தம் எடுத்து வந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (22), கிரி (22) ஆகியோர் மது போதையில் வந்து முனிரத்தினம் மீது விழுந்தனர்.

இதில் தீப்பந்தத்தில் இருந்த தீ முனிரத்தினம் உடையில் பற்றியது. தீக்காயம் அடைந்த முனிரத்தினத்தை அம்மன் ஊர்வலத்தில் வந்தவர்கள் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனிரத்தினம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிரத்தினம் உடலில் தீப்பிடிப்பதற்கு காரணமாக இருந்த வெங்கடேசன், கிரி ஆகியோரை கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்