புதுச்சேரியில் தமிழ் புறக்கணிப்பு: ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்படும் வழிகாட்டி பலகைகள்
இந்தி மொழி திணிப்பு தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள சூழலில் தமிழ் மொழியை புதுச்சேரி அரசு புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மட்டுமே வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், நகர்புற மேம்பாடு, கடற்கரை புனரமைப்பு, ஒயிட் டவுன் என்று அழைக்கப்படும் பெரிய வாய்க்கால் முதல் கடற்கரை வரை உள்ள சாலை வரை உள்ள பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதில் சாலைகளில் இருபுறமும் அகலமான நடைபாதை அமைத்து அதில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இங்குள்ள தெருக்கள் அகலமாகவும், நேராகவும் காணப்படுகிறது. தற்போது கிரானைட் கற்கள் அமைப்பது புதுவைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. புதுச்சேரி நகரை மேலும் அழகுப்படுத்தும் வகையில் தெருவின் பெயர்களை வழிகாட்டி பலகையாக வைத்து வருகின்றனர்.
தற்போது இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக கடும் சர்ச்சை எழும்பியுள்ளது. புதுவை மாநிலத்தில் இரு மொழி கொள்கை என்பதில் உறுதி என முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் மாநில மக்கள் பெருமளவில் பேசும் தமிழ் மொழியை புதுச்சேரி அரசே புறக்கணிப்பதுதான் விநோதமாக உள்ளது.
புதுவை தெருக்களில் முன்பு இருந்த வழிகாட்டி பலகைகளில் தெருக்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருக்கும். தற்போது நகரப்பகுதிகளில் அந்த பெயர்பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழிகாட்டி பலகைகளில் ஆங்கில மொழியில் மட்டுமே தெருக்களின் பெயரை எழுதி வைத்துள்ளனர். தமிழ்மொழியை முதன்மையாக கொண்டுள்ள மக்கள் அதிகம் வாழும் புதுவையில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பலகை வைப்பதன் மூலம் தமிழை புதுச்சேரி அரசு புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ் ஆர்வலர்கள் கேட்ட போது, ‘‘பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த மண், புதுவை. இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இடம் இது. தற்போது புதுவையில் புதிதாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தமிழை புறக்கணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்மொழி தெரியாத அதிகாரிகள், ஊழியர்கள் புதுவையில் அதிகரித்துள்ளது தான் இதற்கு முக்கியக் காரணம். தமிழ் மொழியை நன்கு அறிந்த ஆட்சியாளர்களும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது தவறானது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல், ரெயிலில் உள்ள தகவல் பலகையில் கூட அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல் இடம் பெற்று இருக்கும். ஆனால் புதுவையில் தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதை உடனே சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.