வடகெரே ஏரியில் தண்ணீர் நிரப்பாததை கண்டித்து காவிரி ஆற்றில் குதித்து 5 விவசாயிகள் தற்கொலை முயற்சி
வடகெரே ஏரியில் தண்ணீர் நிரப்பாததை கண்டித்து காவிரி ஆற்றில் குதித்து 5 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவத்தால் குண்டலுபேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளேகால்,
வடகெரே ஏரியில் தண்ணீர் நிரப்பாததை கண்டித்து காவிரி ஆற்றில் குதித்து 5 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவத்தால் குண்டலுபேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
வடகெரே ஏரி
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை அருகே உள்ளது வடகெரே ஏரி. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மறைந்த முன்னாள் மந்திரி மகாதேவ பிரசாத் வடகெரே ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவர் இறந்த பின்னர் வடகெரே ஏரிக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் வடகெரே ஏரிக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரி புட்டரங்கஷெட்டி, குண்டலுபேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நிரஞ்சன்குமார் ஆகியோருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தண்ணீர் நிரப்ப மந்திரி, எம்.எல்.ஏ., அதிகாரிகள் என யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மந்திரி புட்டரங்கஷெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் நேற்று மதியம் வடகெரே ஏரியின் அருகே ஓடும் காவிரி ஆற்றின் கரையில் அமர்ந்து திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்காத மந்திரி, எம்.எல்.ஏ.க்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த குண்டலுபேட்டை தாசில்தார், போலீசாருடன் அங்கு சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தில் 5 விவசாயிகள் திடீரென காவிரி ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் 5 பேரையும் மீட்டனர். இந்த சம்பவத்தால் குண்டலுபேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.