எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு குத்தகை கொடுக்கும் ‘ரோடு மேப்’ திட்டம்; ரெயில்வே தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு

இந்திய ரெயில்வேக்கு சொந்தமான ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு கொடுக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ள ‘ரோடு மேப்’ திட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-18 23:00 GMT
மதுரை,

பொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலுக்கு முக்கிய இடம் உண்டு. நவீன தொழில்நுட்ப யுகத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும், ரெயில் பயணம் என்பது தனி சுகமே. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மனிதனுக்கு புதுப்புது பெயரில் நோய்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனால், தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் ரெயில் பயணம் என்பது தவிர்க்கமுடியாததாகி விட்டது.

இதற்கிடையே மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது. இதற்காக, ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து பிரிவுகளையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

சுகாதார பணிகள் அனைத்தும் தற்போது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக, ஸ்டேசன் இயக்குனர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதில், ஒப்பந்த பணிகளை மேற்கொள்பவர்கள் பணியாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி உரிய சம்பளம், பி.எப். இ.எஸ்.ஐ. ஆகியன வழங்குவதில்லை.

இதனால், ஒப்பந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் ‘பியூச்சர் ரோடு மேப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரெயில்வே துறையை நவீன மயமாக்குதல் என்ற பெயரில் அனைத்து பிரிவுகளையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயணிகள் செல்லும் சொகுசு ரெயில்களான ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களை தற்போது சோதனை அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்போவதாக அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படிப்படியாக, தேஜஸ், பிரிமீயம் ரெயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதில் தீவிரமாக இருந்து வருகிறது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். ஏற்கனவே, வேலைவாய்ப்பின்மை நாட்டில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், ரெயில்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பது பயணிகளின் பாதுகாப்பில் விளையாடுவது போன்றதாகும்.

ஏற்கனவே ரெயில்நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களை கடைக்கு ஒதுக்கி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். விளம்பர பலகைகளை தனியாருக்கு ஒதுக்கி இடத்தை அடைத்துக்கொள்கின்றனர். இலவச சேவையாக இருந்த பேட்டரி கார் தற்போது கட்டண சேவையாக மாற்றப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகம் முழுவதும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

தற்போது ரெயில்களையும் தனியாருக்கு கொடுத்துவிட்டால் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் நிலைத்தன்மையை இழந்து விடும் அபாயம் உள்ளது.

எனவே, ரெயில்வே அமைச்சகத்தின் ரோடு மேப் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்