கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை

கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2019-06-18 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேல கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 50). இவர், கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி(36). இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், சந்தியா என்கிற மகளும் உள்ளனர்.

சந்தோஷ், கோவையில் வேலை பார்த்து வருகிறார். சந்தியா அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சந்தியாவின் தாத்தா வீடு அதே பகுதியில் உள்ளது. வசந்தி பெரும்பாலும் தனது மகளை தந்தை வீட்டிற்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்ற சந்தியா பள்ளி முடிந்து மாலையில் வழக்கம்போல் தனது தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த வசந்தி வாய், முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு, வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டது. அது வசந்தியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று சாலை வரை சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து சந்தியா கொடுத்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தியின் கொலைக்கான காரணம் என்ன? தனியாக இருந்த வசந்தியை அடிக்கடி சந்தித்தது யார்? முன்விரோதம் காரணமாக வசந்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக வசித்து வந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்