நெல்லை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-06-18 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கந்துவட்டி புகார் மையம்

நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்களை அளிக்க கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

கந்து வட்டி பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் 9629711194 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணில் பெறப்படும் புகார்களும், நேரில் பெறப்படும் புகார் மனுக்களும், அந்தந்த பகுதி தாசில்தார் மற்றும் போலீஸ் நிலையத்துக்கு உடனடி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் புகார்கள் குறித்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

உரிமம் பெற வேண்டும்

நெல்லை மாவட்டத்தில் வட்டித் தொழில் செய்வோர், வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தாசில்தாரிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் வட்டித்தொழில் செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகார் மையம் தவிர மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் அலுவலரின் 0462-2576265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

மேலும் செய்திகள்