எஸ்.வி.சேகர் நாடகத்துக்கு அனுமதி, நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி - பாண்டவர் அணியினர் குற்றச்சாட்டு

எஸ்.வி.சேகர் நாடகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக பாண்டவர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2019-06-18 23:00 GMT
சேலம்,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், கருணாஸ், சரவணன், பூச்சிமுருகன், கோவை சரளா ஆகியோர் நேற்று சேலம் வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும். தேர்தல் நடத்துவதற்காக 5 இடங்களை நீதிபதி பத்மநாபன் பார்வையிட்டார். இதில் எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் அதிக வசதி இருந்ததால் அங்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை கடந்த மே மாதம் 17-ந் தேதி பெற்றோம்.

இந்த இடத்தில் தேர்தல் நடத்த கூடாது என்று பாரிவேந்தன் என்பவர் கூறி உள்ளார். இவர், ஐசரி கணே‌‌ஷ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த அவர்கள் சதி செய்கிறார்கள். கடந்த தேர்தலின் போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சரியான பாதுகாப்பு கொடுத்தார். தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என சொல்கிறார்கள். இதற்கு ஐசரி கணே‌‌ஷ் தான் காரணம்.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாடக நடிகர்கள் சந்திப்பு கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அதிகாரிகள் பேசியதையடுத்து அங்கு கூட்டம் நடத்த அனுமதி தர மறுத்துவிட்டனர். இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற அழுத்தத்தை கொடுத்தது ஐசரி கணேஷ் மற்றும் முன்னாள் மேயர் சவுண்டப்பனாக இருக்கக்கூடும் என்று குற்றம் சாட்டுகிறோம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 163 ஓட்டுகளையும் வாங்கி தருவதாக முன்னாள் மேயர் சவுண்டப்பன் உறுதியளித்தார். ஆனால் அவர் தற்போது சுவாமி சங்கரதாஸ் அணிக்கு சாதகமாக பேசுகிறார். தேர்தல் நடக்கும் அதே கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் தான் எஸ்.வி.சேகருக்கு நாடகம் நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். இந்த அனுமதி கடந்த 16-ந் தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை. இருக்கிற பிரச்சினையில் இந்த தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற வேலை அரசுக்கு இல்லை. ராதாரவியை அமைச்சர் ஒருவர் மூலம் அ.தி.மு.க.வில் இணைத்தவர் ஐசரி கணே‌‌ஷ். இவர் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

முதல்-அமைச்சரை சந்தித்து நடிகர் சங்க தேர்தலை முறையாக நடத்தி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் மனு கொடுத்துள்ளோம். மேலும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்தும் பேசுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நாடக நடிகர்கள் சிலரை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

மேலும் செய்திகள்