திருமயம் அருகே மரம் வெட்ட குழி தோண்டிய போது - பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

திருமயம் அருகே மரம் வெட்ட குழி தோண்டிய போது பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.;

Update: 2019-06-18 22:30 GMT
திருமயம், 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் நாகநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்ய பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேரையூர் கண்மாய் பகுதியில் முத்தையா என்பவருக்கு சொந்தமான இடத்தை பேரையூரைச் சேர்ந்த சுப்பன் வாங்கினார்.பின்னர் அந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்டி கொள்ளும்படி சுப்பன் குடும்பத்தினர் ஐயப்பன் என்பவரிடம் கூறினர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தொழிலாளர்களை கொண்டு மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஐயப்பன் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அங்கிருந்த வாகை மரத்தை வேருடன் அகற்றுவதற்காக அதனருகே நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது.

அப்போது முதலில் ஒரு பழங்கால ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள், தொடர்ந்து தோண்ட தொடங்கினார்கள். அப்போது, அங்கு ஐம்பொன் சிலைகள் குவியல்களாக இருந்தன. உடனே அவர்கள் இதுபற்றி நில உரிமையாளருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருமயம் தாசில்தார் சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி அர்ச்சுணன் மற்றும் நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் தோண்டி பார்த்தனர்.

முதலில் பழங்கால 11 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் குழிதோண்டிய போது 6 சிலைகள் மற்றும் 4 பீடங்கள் கிடைத்தன. இதில் 4 அம்பாள் சிலை, விஷ்ணு, சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நடராஜர், மாணிக்கவாசகர், பீடம் சூலாயுதம் உள்ளிட்ட 21 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு பின்னரே சிலையின் காலம், மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஆய்வுக்கு பின் இந்து சமய அறநிலைய துறையினரிடம் அந்த சிலைகள் ஒப்படைக்கப்படும். சிலை கண்டெடுக்கப்பட்ட செய்திஅப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்