குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.;

Update: 2019-06-18 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பான அமர்வு ராமநாதபுரத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதில் தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட குழந்தை உரிமை மீறல் புகார்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் இல்லங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புகார்கள்

மேலும் அபாயகரமான வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துதல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்காமல் இருத்தல், மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கை எடுத்தல், சாலையோரங்களில் பொருட்களை விற்பனை செய்யும் குழந்தைகள், திராவக வீச்சு தொடர்பான நிகழ்வுகள், பெற்றோர், பாதுகாவலர் அல்லது வேறு நபர்களுடனோ தெருவோரத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், பிச்சை எடுக்க வற்புறுத்துதல், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துதல், தாக்குதல் மற்றும் கைவிடுதல், குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாகுபாடு செய்தல், தற்கொலைகள், குழந்தை கடத்தல், பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை மறுக்கப்படுதல், பள்ளி வளாகங்களை தவறாக பயன்படுத்துதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு புகார்களை அமர்வில் பொதுமக்கள் வழங்கலாம். இதுபோன்ற புகார்களை இன்று (புதன்கிழமை) முதல் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் பெற வேண்டும். பொதுமக்கள் ராமநாதபுரத்தில் நடைபெறும் அமர்விலும் கலந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம். இந்த அமர்வில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்தால், போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புக்கு...

மேலும் குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, மணிநகர், பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 0461-2331188, 97870 02395, 94880 68588 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மீரா சங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்