குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

Update: 2019-06-17 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மக்கள் மன்றம் சார்பில் கலெக்டர் சி.கதிரவனிடம் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள குளம், குட்டை, கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் ஊற்று கசிவும் குறைந்துவிட்ட காரணத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை போக்க உடனடியாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை 6-வது பிரதான கால்வாய் கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதான கால்வாய் 74-வது மைலில் இருந்து 84-வது மைல் வரை தூர்வாரப்பட்டது. இதனால் இந்த 10 மைல் தூரம் தண்ணீர் விரைவாகவும், தேக்கமின்றியும் செல்கிறது. ஆனால் பிரதான கால்வாய் 84-வது மைலில் இருந்து 125-வது மைல் வரை இருபுறமும் செடி, கொடிகளும் மரக்கிளைகளும் தொங்கி கொண்டு உள்ளன.

மேலும் கால்வாயின் நடுவில் ஏராளமான வண்டல் மண் கிடக்கிறது. இதனால் கடைக்கோடியான 125-வது மைல் வரை பாசத்திற்கு தண்ணீர் சரியாக சென்றடைவதில்லை. எனவே மேற்கண்ட பிரதான கால்வாயை தூர்வாரி செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘கடந்த மே மாதம் 1-ந்தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டம் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள காலி நிலங்களை தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

அந்தியூர் எண்ணமங்கலத்தை சேர்ந்த உத்தாயம்மாள் (வயது 87) என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது சொத்தை 3 மகன்களுக்கும் பிரித்து கொடுத்தேன். ஆனால் தற்போது எனது மகன்கள் என்னை முறையாக கவனிக்கவில்லை. மேலும் எண்ணமங்கலத்தில் உள்ள பூர்வீக வீட்டில் என்னை வசிக்க விடாமல் எனது மகன்கள் வெளியேற்றி விட்டனர். எனவே அங்கு நான் தொடர்ந்து வசிக்க வழிவகை செய்ய வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன், துணைச்செயலாளர் தேசிங்கு, மாநகர செயலாளர் ருத்ரன் மற்றும் நிர்வாகிகள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சி.கதிரவனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாநகர் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டு சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் மாநகரில் வசிப்பவர்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் பல்வேறு விதமான தோல் தொற்று நோய்கள், சரும பிரச்சினை, மூச்சு திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் உள்ளாகி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி போர்கால அடிப்படையில் ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 277 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வருவாய்த்துறை சார்பில் கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தலா ரூ.74 ஆயிரத்து 500 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டன. மேலும் டாக்டர் அம்பேத்கர் தேசிய தகுதி உடையோர் விருது பெற்ற மாணவன் கிருஷ்ணரோகித்திற்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்