சிதம்பரத்தில், கல்லூரி மாணவி மானபங்கம் - பட்டதாரி வாலிபர் கைது
சிதம்பரத்தில் கல்லூரி மாணவியை மானபங்கப்படுத்திய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் எஸ்.ஆர்.நகரை சேர்ந்தவர் கலைக்கண்ணன். இவருடைய மகன் சூர்யா (வயது 22). பி.எஸ்சி. படித்துள்ள இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி, திட்டி அனுப்பி விட்டார். இருப்பினும் சூர்யா, அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்குமாறு சூர்யா, அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை மாணவி, தனது தாயுடன் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சூர்யா, திடீரென ஆபாசமாக திட்டி மாணவியின் கையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால், மாணவியை தாக்க முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அந்த மாணவி, விலகிக்கொண்டார். இது குறித்து மாணவியின் தாய், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.