திண்டுக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில், பெண் இன்ஸ்பெக்டர்-வக்கீல் மோதல், சாலை மறியல்-முற்றுகை

திண்டுக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர், வக்கீல் மோதலை தொடர்ந்து வக்கீல்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், காதல் திருமணம் செய்த ஒரு ஜோடியிடம் இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று விசாரணை நடத்தினார். அங்கு பெண் வீட்டாரின் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வக்கீல் தியாகு, போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் வக்கீல் தியாகு ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் வசந்தியை தாக்கியதாக வக்கீல் தியாகுவை, திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான வக்கீல்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தி தாக்கியதில் வக்கீல் தியாகு காயம் அடைந்துள்ளதாகவும், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், வக்கீல் தியாகு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த வக்கீல்கள், வடக்கு போலீஸ் நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சப்-கலெக்டர் அலுவலக சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி, துணை சூப்பிரண்டுகள் மணிமாறன், ஜஸ்டின்பிரபாகரன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே வக்கீல் தியாகு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் வக்கீல்கள் மறியலை கைவிட்டு, வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நேற்று நள்ளிரவு வரை முற்றுகை போராட்டம் நடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் அங்கு வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்