டாக்டர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி, 300 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன

டாக்டர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் 300 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.

Update: 2019-06-17 22:15 GMT
தேனி,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று தனியார் மருத்துவமனைகளின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு இருந்தது. உள்நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

நேற்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. புற நோயாளிகள் சிகிச்சை மற்றும் தீர்மானிக்கப்பட்ட அவசரமில்லாத அறுவை சிகிச்சை புறக்கணிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் சுமார் 300 தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டன. சுமார் 850 டாக்டர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை தவிர்த்து, இதர சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பகல் 12 மணியளவில் மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவர்கள் சங்க கம்பம் பள்ளத்தாக்கு கிளை, முல்லைப்பெரியாறு கிளை, அனைத்து அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அரவாளி தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் மாவட்ட செயலாளர் சிவா, அரசு டாக்டர்கள் சங்க செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்