குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, ஊட்டி-குன்னூர் சாலையில் பெண்கள் மறியல்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊட்டி-குன்னூர் சாலையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி நகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்டது நொண்டிமேடு பகுதி. இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வீடுகளுக்கு என்று தனியாக நகராட்சி மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுக்குழாய்களும் உள்ளது. மலைச்சரிவான மற்றும் உயரமான இடம் என்பதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நொண்டிமேட்டில் சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்தனர். சிலர் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பக்கத்து வீடுகளில் குடிநீரை பெற்றனர். மேலும் லாரியில் தண்ணீரை வரவழைத்து பெண்கள் குடங்களில் பிடித்து வீடுகளுக்கு சுமந்து சென்றார்கள். தொடர்ந்து குடிநீர் வழங்காததால், குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று திடீரென ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்துணவு மைய பஸ் நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஊட்டி-குன்னூர் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்துணவு மையத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையும், லவ்டேல் சந்திப்பு வரையும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி கூறினர்.

இதையடுத்து ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை, இதனால் நாங்கள் குழந்தைகளுடன் தண்ணீர் இல்லாமல் க‌‌ஷ்டப்பட்டு வருகிறோம் என்றனர். அதற்கு பொறியாளர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இன்று(நேற்று) அல்லது நாளை(இன்று) குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் உடனடியாக லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தண்ணீர் லாரி வந்தவுடன் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து சிறிது நேரத்துக்கு பிறகு அந்த வழியே போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்