தலைவாசல் அருகே, நிதி நிறுவன அதிபர் காரில் கடத்தல் - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தலைவாசல் அருகே நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-06-17 22:30 GMT
தலைவாசல், 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியில் வசிப்பவர் கொம்பாட்டி மணி (வயது 58) பிரபல நிதி நிறுவன அதிபர். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. குழந்தை இல்லை. தற்போது மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் கொம்பாட்டி மணி நேற்று காலை 8.50 மணிக்கு தலைவாசல் அருகே சம்பேரி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் அருகில் நின்றது. உடனே காரில் இருந்தவர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இது குறித்து நிதி நிறுவன அதிபரின் தம்பி துரைராஜ் (55), தனது அண்ணன் கொம்பாட்டி மணியை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாக தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொம்பாட்டி மணியையும், அவரை கடத்தி சென்ற மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கொம்பாட்டி மணி, கார் மற்றும் லாரி ஆகியவற்றிற்கு அடமானக் கடன் கொடுத்து வந்துள்ளார். நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

தொழில் முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டாரா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக கடத்தப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்