வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தொழிலாளர்கள் மனு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.;

Update: 2019-06-17 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரண உதவிதொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வேலை அட்டை பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும். கால்நடை மேய்ச்சல் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மாற்று இடம்

காரிமங்கலம் தாலுகா பைசுஅள்ளி பள்ளத்து கொட்டாய் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் 12 குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்களாக வீடு கட்டி வசித்து வருகிறோம். அரசு கட்டிடங்கள் கட்ட அந்த இடத்தை கையகப்படுத்த இருப்பதாகவும், அதனால் வீட்டை காலி செய்யுமாறும் தெரிவித்து உள்ளனர். எனவே எங்களுக்கு அரசின் சார்பில் மாற்று இடம் வழங்கவும், அங்கு வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பென்னாகரம் தாலுகா பெரியூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினர் கொடுத்த மனுவில், மாடுகள் கட்டும் இடம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எங்கள் கிராமத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கூலிப்படையினர் வைக்கோலுக்கு தீவைத்துவிட்டு மாடுகளையும் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதால் வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டோம். நாங்கள் மீண்டும் அங்கு சென்று குடி இருக்கவும், எங்களுக்குரிய சொத்துக்களை மீட்டுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்