மராட்டியத்தில் வளர்ச்சியில் சரிவை சந்தித்த பல துறைகள் பொருளாதார ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
மராட்டியத்தில் பெரும்பாலான துறைகளின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு 2025-ம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடையவேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மராட்டிய சட்டசபையில், நடந்து முடிந்த நிதி ஆண்டுக்கான (2018-19) பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது அரசின் இலக்குக்கு தலைகீழாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையின் படி பெரும்பாலான துறைகள் சரிவை நோக்கி சென்றுகொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கட்டுமான துறையில் 2 சதவீத கூடுதல் வளர்ச்சி கண்டுள்ளபோதிலும். அதை தவிர அனைத்து துறைகளும் கடந்த ஆண்டு மந்தமான வளர்ச்சியையே அடைந்துள்ளன.
உற்பத்தி துறையில் 2017-18-ம் நிதியாண்டில் 7.7 சதவீத வளர்ச்சி பெற்றிருந்தது. அது கடந்த (2018-19) நிதியாண்டில் 7.1 சதவீத வளர்ச்சியாக குறைந்துள்ளது. இதேபோல சேவை துறையில் 6.5 சதவீத வளர்ச்சி 4.3 சதவீதமாக குறைந்து உள்ளது.
அதுமட்டும் இன்றி பயிர் உற்பத்தி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆய்வறிக்கை குறித்து நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார் கூறியதாவது:-
வர்த்தகம், மருத்துவம், தகவல்தொடர்பு, நிதி மற்றும் தொழில்முறை சேவைகள், பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவை துறைகளின் வளர்ச்சி 2017-18 ஆண்டை விட அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்த துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட துறைகளில் முதலீடுகளை வைத்து மட்டுமே வளர்ச்சியை கணக்கிடக்கூடாது.
முதல்முறையாக மராட்டியத்தில் தற்போது 226 மெகாவாட் மின்சாரம் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மழைப்பொய்த்துப்போனதன் காரணமாகவே விவசாயத்துறை வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவான் மாநில பொருளாதார ஆய்வறிக்கையில் சந்தேகம் எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “2017-18-ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில், வேளாண்துறை வளர்ச்சி விகிதம் மைனஸ் 8.3 ஆக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் 2018-19 அறிக்கையில் 3.4 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி 12 சதவீதம் அபரிமிதமான மாற்றம் ஏற்பட வாய்பே இல்லை. இதற்கான ஆதாரத்தை அரசு தாக்கல் செய்யவேண்டும்.
2017-18-ம் ஆண்டில் பயிர் வளர்ச்சி 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ராபி பயிர் உற்பத்தி 63 சதவீதம் குறைந்தது. பின்னர் எப்படி அந்த ஆண்டு 3.4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்” என்றார்