மராட்டிய சட்டசபையில் இன்று கூடுதல் பட்ஜெட் தேர்தலை குறிவைத்து புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

மராட்டிய சட்டசபையில் இன்று கூடுதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தேர்தலை குறிவைத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-06-17 23:30 GMT
மும்பை, 

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசின் தற்போதைய பதவி காலம் வரும் அக்டோபரில் முடிவுக்கு வருகிறது. எனவே மராட்டிய சட்டசபைக்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் மாநில மந்திரி சபை விஸ்தரிப்பு செய்யப்பட்டது. இதில், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் சட்டசபை எதிர்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் உள்பட 13 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

இந்த நிலையில், நேற்று மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை கூட்டத் தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில அரசு கூடுதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் இந்த பட்ஜெட்டை மதியம் 2 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டுக்கான இறுதி வடிவம் நேற்று கொடுக்கப்பட்டது.

மராட்டிய அரசின் 2019-ம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போது கூடுதல் பட்ஜெட் என்ற பெயரில் மற்றொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது மராட்டிய மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை குறி வைத்து மக்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

குறிப்பாக விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் வறட்சி பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் வறட்சி நிவாரணம் தொடர்பான அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்