ரூ.10 கோடி தங்க கடத்தல் வழக்கில் 7 பேர் கைது
ரூ.10 கோடி தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பார்சல் மூலம் அதிகளவு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மும்பை சாந்தாகுருசில் உள்ள விமான நிலைய பார்சல் பிரிவில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.10 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இந்த தங்கம் துபாயில் இருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டு பின்னர் அங்கு இருந்து மும்பைக்கு கடத்தி கொண்டுவரப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பார்சல்களை உள்ளூர் கூரியர் நிறுவனங்கள் மூலம் பெற கடத்தல்காரர்கள் திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் கடத்தலில் தொடர்புடைய சஞ்சய் திட்வானியா (வயது49), மனோகர் கதோரி (47), ஜெய்பிரகாஷ் சைனி (29) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.