தோசை மாவு பிரச்சினை: எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவையினர் மனு

தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரவையினர் மனு அளித்தனர்.

Update: 2019-06-17 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் மற்றும் நிர்வாகிகள் திரளாக வந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் செல்வம். இந்த கடையில் கடந்த 14-ந் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் ரூ.20 கொடுத்து 2 மாவு பாக்கெட்டுகளை வாங்கி சென்றார். பின்னர் மீண்டும் கடைக்கு வந்து மாவு புளிக்கிறது என்று கூறி மாவு பாக்கெட்டுகளை கடை உரிமையாளர் செல்வத்தின் மனைவி கீதா என்பவரின் முகத்தில் தூக்கி வீசியுள்ளார்.

அதோடு அவர் பொறுமை இழந்து தகாத வார்த்தைகளும் பேசி இருக்கிறார். அப்போது அங்கு வந்த செல்வம் அவரை தட்டிக் கேட்டுள்ளார். ஆனால் ஜெயமோகன் செல்வத்தை தாக்கியுள்ளார். எனவே கீதா கொடுத்த புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

மேலும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கீதா மற்றும் அவருடைய கணவர் செல்வம் ஆகியோருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்