ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை குறிப்பிட்டு சித்தி விநாயகர் கோவில் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

முன்னாள் காதலியை போலீசில் சிக்க வைப்பதற்காக ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பற்றி குறிப்பிட்டு சித்தி விநாயகர் கோவில் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-06-17 23:00 GMT

மும்பை, 

நவிமும்பை உரண் பகுதியில் உள்ள பால்தின் தூண்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதி மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆகியோரை புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. இது மும்பை மற்றும் நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை குறிப்பிட்டு பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தானேயில் உள்ள வணிகவளாகவிளம்பர போஸ்டர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

மேலும் அதில் ஒரு இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவரின் பெயர், செல்போன் எண்கள் எழுதப்பட்டுஇருந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு அதில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அப்போது, எதிர்முனையில் பேசிய இளம்பெண் விக்ரோலியை சேர்ந்த கேதன் கோட்கே என்ற வாலிபர் தன்னை பழிவாங்க அதை எழுதி இருப்பார் என கூறினார். அதன்பேரில் போலீசார் கேதன் கோட்கேவை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர் தான் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் சித்தி விநாயகர் கோவிலுக்கு அச்சுறுத்தல் என எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன. கேதன் கோட்கேவும், மேற்படி இளம்பெண்ணும் 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், அந்த பெண் கேதன் கோட்கே உடனான காதலை முறித்துவிட்டு வேறொரு வாலிபரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்து கோபம் அடைந்த கேதன் கோட்கே இருவரையும் பழிவாங்குவதற்காக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றி எழுதி அதில் அவர்களது செல்போன் எண்களையும் குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்