வளவனூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - டிரைவர் பலி
வளவனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
வளவனூர்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அமைதி நகர் குருமாம்பேட்டையை சேர்ந்தவர் வாழ்முனி மகன் பிரகாஷ்(வயது 40). டிரைவர். இவருடைய மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பத்திரிகை வைப்பதற்காக, பிரகாஷ் தனது மனைவி பார்வதியுடன்(35) ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் வந்தார். பின்னர் அங்குள்ள உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி புறப்பட்டார்.
வளவனூர் அடுத்த நல்லரசன் பேட்டை என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், பிரகாஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பிரகாஷ், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித், அவருடன் பின்னால் அமர்ந்து வந்தவர் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். பார்வதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து பலத்த காயமடைந்த ரஞ்சித் உள்ளிட்ட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.