திருவண்ணாமலையில் ரேஷன் கடையில் தள்ளு முள்ளு; மூதாட்டி பரிதாப சாவு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் ரேஷன் கடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை அருகே உள்ள இனாம்காரியந்தல் பகுதியை சேர்ந்தவர் பெரமாண்டம் ஆச்சாரி. இவரது மனைவி தனபாக்கியம் (வயது 67). இவரது மகன் சவுந்தர். இவர், சென்னையில் வேலை செய்து வருகிறார். கணவர் இறந்த நிலையில் தனபாக்கியம் இனாம்காரியந்தலில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இறக்கப்பட்டு உள்ளது. இதனால் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று அதிகாலையில் இருந்தே ரேஷன் கடை முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
காலை 9 மணி அளவில் ரேஷன் கடை விற்பனையாளர் கடையை திறந்து பொருட்கள் விற்பனையை தொடங்கினார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் தனபாக்கியம் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தனபாக்கியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நியாய விலை கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், இனாம்காரியந்தல் கூட்டுறவு ரேஷன் கடையில் 900-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் பொருட்கள் வழங்கும் போது இதுபோன்ற தள்ளு - முள்ளு ஏற்படுகிறது. தற்போது தள்ளு முள்ளுவில் சிக்கி தனபாக்கியம் இறந்துள்ளார். இதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் ரேஷன் கடை திறக்க வேண்டும். அல்லது பகுதி நேர ரேஷன் கடை திறந்து அந்தந்த பகுதியில் பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.