துமகூருவில் எனது தோல்விக்கு யாரையும் காரணம் கூறமாட்டேன் தேவேகவுடா பேட்டி
துமகூருவில் எனது தோல்விக்கு யாரையும் காரணம் கூறமாட்டேன் என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை நிறுத்தும் நோக்கம் இருக்கவில்லை. ஆனால் மண்டியாவை சேர்ந்த எங்கள் கட்சியின் நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்ததால் அவரை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
நிகில் குமாரசாமி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அவர் தோல்வி அடைந்தாலும், அமைதியாக உட்காரும் நபர் அல்ல. அவருக்கு அரசியலிலேயே இருந்து, போராடும் குணம் உள்ளது. திரைத்துறையை விட அரசியல் களத்தில் அவர் அதிகமாக பணியாற்றுகிறார்.
துமகூருவில் எனது தோல்விக்கு யாரையும் காரணம் சொல்ல மாட்டேன். யாரையும் குறிவைத்து பேசுவது சரியல்ல. தோல்வி அடைந்த பிறகு அதுபற்றி விவாதிக்கக்கூடாது. நான் தற்போது, கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.
முதல்-மந்திரி குமாரசாமி தினமும் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கிராம தரிசனத்தில் அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். காலை 10 மணி முதல் இந்த கிராம தரிசனம் தொடங்குகிறது. இரவு ஒரு பள்ளி கட்டிடத்தில் அவர் தங்குகிறார்.
ஊடகங்கள் மீது முதல்-மந்திரிக்கு சிறிது கோபம் உள்ளது. வரும் நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். கூட்டணி அரசு அமைந்தது முதல், ஊடகங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருக்கிறது. கிராம தரிசனத்தின்போது, முதல்-மந்திரி பத்திரிகையாளர்களிடம் பேசுவார்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.