இரியூர்-சிரா சாலையில் சம்பவம் லாரி மோதி 20 ஆடுகள் செத்தன

இரியூர்-சிரா சாலையில் லாரி மோதி 20 ஆடுகள் பரிதாபமாக செத்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-06-16 22:00 GMT
சிக்கமகளூரு, 

துமகூரு மாவட்டம் சிரா தாலுகா கவுடக்கெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவண்ணா. இவருக்கு சொந்தமான 100 ஆடுகளை தாவணகெரே மாவட்டம் இரியூர் பகுதியில் கொட்டகை அமைத்து வளர்த்து வந்தார். ஆடுகளை மேய்ப்பதற்காகவும், அவற்றை பராமரிக்கவும் அங்கு 2 தொழிலாளிகளையும் பணியில் அமர்த்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த 2 தொழிலாளர்களும், ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் கொட்டகைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இரியூர்-சிரா நெடுஞ்சாலையில் அழைத்து வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு லாரி திடீரென ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இதில் லாரி மோதி தூக்கி வீசியும், சக்கரங்களில் சிக்கியும் 20 ஆடுகள் உடல் நசுங்கி செத்தன. மேலும் 10 ஆடுகள் படுகாயம் அடைந்தன. இதையடுத்து அந்த லாரி அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டது. இதைப்பார்த்த 2 தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் இரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்