பிரதமரை, நாராயணசாமி சந்தித்த போது மாநில வளர்ச்சிக்காக நிதி பெறும் முயற்சியை தவற விட்டு விட்டார்; அன்பழகன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

பிரதமரை, முதல்–அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசியபோது மாநில வளர்ச்சிக்காக நிதி பெறும் முயற்சியை தவற விட்டுவிட்டார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2019-06-16 23:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி கடந்த 3 ஆண்டு காலமாக கவர்னர் மற்றும் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருந்தார். இதனால் மாநில வளர்ச்சி, மக்களின் தேவைகள், குறித்து சிந்திக்காமல் 3 ஆண்டுகளை முழுமையாக வீணடித்துள்ளார். இனி வரும் காலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்–அமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி, மாநிலத்தின் பல்வேறு தேவைகள் குறித்து தெரிவித்து, நிதி பெறும் முயற்சியை தவறவிட்டுள்ளார். வழக்கம்போல் தனிமாநில அந்தஸ்து, மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, கடன் தள்ளுபடி ஆகியவை குறித்தே பேசியுள்ளார். மேலும் சர்வதேச கருத்தரங்கு கூடம் அமைக்க ரூ.500 கோடியும், சட்டசபையை புதுப்பிக்க ரூ.500 கோடியும் கேட்டுள்ளார். ஏற்கனவே ஜிப்மரில் சர்வதேச கருத்தரங்கு கூடம் இருக்கும் நிலையில் இன்னொரு கருத்தரங்கு கூடம்தேவையா?. ஆண்டிற்கு 15 தினங்கள்கூட நடத்தாத சட்டசபையை புதுப்பிக்க வேண்டுமா?

தேசிய பஞ்சாலை கழகத்தின் மூலம் நாட்டில் நலிவுற்ற பஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.500 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் மூடிக்கிடக்கும் சுதேசி, பாரதி, ரோடியர் மில்களை புனரமைக்க நிதி எதுவும் கேட்கப்படவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி கேட்டிருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் கேட்டு மத்திய அரசை வலியுறுத்தவில்லை.

மாறாக மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். பிரதமரை சந்தித்தது 10 நிமிடங்கள்தான். புதுச்சேரி மாநில நலனிற்காக முதல்–அமைச்சர் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் மூலம் தனது பொறுப்பில் இருந்து தவறியுள்ளார்.

புதுவை மாநிலத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும், எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று சட்டசபை கட்சி தலைவர்களை கூட அழைத்து பேசவில்லை. சட்டமன்ற பொது கணக்குக்குழு, மதிப்பீட்டுக்குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் கூட அமல்படுத்துவது இல்லை.

புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளும் தூர்வாரப்படவில்லை. ஊசுட்டேரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர்வாரப்படவில்லை. தற்போது ஊசுட்டேரி வறண்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கும் தொலை நோக்கு திட்டம் இல்லை. மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு கட்டிடங்களில்கூட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை. புதுச்சேரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு அரசின் அலட்சிய போக்கே காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்