இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்; மத்திய சுகாதார துறை தலைமை இயக்குனர் தகவல்

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சுகாதார துறை தலைமை இயக்குனர் டாக்டர் எஸ். வெங்கடேஷ் கூறினார்.

Update: 2019-06-16 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் செவிலியர் மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கான 9-வது பட்டமளிப்பு விழா நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு ஜிப்மர் தலைவரும், துணைவேந்தருமான டாக்டர் வி.எம். கடோச் தலைமை தாங்கினார். ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் வரவேற்று பேசினார்.

விழாவில் மத்திய சுகாதார துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் எஸ். வெங்கடேஷ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்பேது அவர் கூறியதாவது:-

உலக தரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எம்.பி.பி.எஸ். பட்டபடிப்பில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அது சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும். வரும் கல்வி ஆண்டில் அந்த பாடத்திடம் அறிமுகம் செய்யப்படும். அதில் மருத்துவமுறை, மருத்துவர்-நோயாளிகளுக்கு உள்ள உறவுமுறை ஆகியவை இடம் பெறும். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், புதிதாக தொடங்கப்படும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியிலும்கூட இந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும்.

நர்சிங் படிப்பிற்கும் தனியாக ஒரு மருத்துவ கவுன்சில் தொடங்க நாடாளுமன்றத்தில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த கவுன்சில் மூலம் செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் வழிநடத்தப்படும்.

தற்போது பட்டம் பெற்றுள்ள நீங்கள் இதோடு படிப்பை முடித்து விடக் கூடாது. தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்றாக பணியாற்ற வேண்டும். நோயாளிகளுக்கு சேவை செய்யும்போது தலைமையேற்று பணி செய்ய வேண்டும். கடமையாக பணியாற்றாமல் தியாக உணர்வோடு பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நீங்கள் மேலும் வளர்ச்சி பெற முடியும்.

இங்குள்ள செவிலியர் கல்லூரியில் போட்டி தேர்வுகளை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். அப்போது தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு கற்பிக்கும் பேராசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி பெற்று வரச்செய்யலாம். அவர்கள் அங்கு கற்று வரும் தகவல்களை மாணவர்களுக்கு கற்பிக்கலாம். இதனால் மாணவர்களின் அறிவு மேலும் வளரும்.

வெளிநாடுகளில் செவிலியர் தலைமையிலான மருத்துவமனைகள் நிறைய செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதே போல் உள்ளது. செவிலியர் தலைமையிலான மருத்துவமனைகள் தொடங்கப்படும் போது அங்கு செவிலியர் மேற்படிப்பு முடித்தவர்களை பணியில் அமர்த்தலாம். இங்கு சர்க்கரை நோய், காயங்களுக்கு மருந்து வைத்தல் போன்ற சிகிச்சைகள் வழங்கலாம். இதனை ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடங்கலாம். இவ்வாறு தொடங்கும்போது மருத்துவர்களின் பாரம் குறையும். தரமான மருத்துவ சிகிச்சையும் வழங்க முடியும். ஏதாவது மருத்துவ ஆலோசனைகள் தேவை என்றால் டாக்டர்களிடம் கலந்து பேசி முடிவு செய்யலாம். ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் செவிலியர் படிப்பில் பி.எச்.டி. தொடங்க மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். எந்தெந்த பாடப்பிரிவுகளில் பி.எச்.டி. தொடங்கலாம் என மத்திய அரசின் அதிகாரிகளை அனுப்பி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்