குடிநீர் பிரச்சினையை தமிழக அரசு சரியாக கையாளவில்லை ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு
குடிநீர் பிரச்சினையை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நேற்று காலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களின் பிள்ளைகள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் அதியமான் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் விஜயகுமார், நம்பிராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் நிருபர்களிடம் கூறியதாவது;-
தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குடிநீர் பிரச்சினையை தமிழக அரசு சரியாக கையாளவில்லை. உள்ளாட்சி துறை அமைச்சர் சரியாக செயல்படவில்லை. இதனால் தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளார்.
அதேபோல் மோடி ஆட்சிக்கு வந்த உடன் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க மிகப்பெரிய அளவில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.