கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டக்காரர்களால் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை; சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டக்காரர்களால் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.;

Update: 2019-06-16 22:30 GMT
கோவை,

கோவை மாநகரில் அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போலீசார் அனுமதி அளிக்கின்றனர்.

மற்ற இடங்களி்ல் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது. அந்த இடம் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்டபட்டதாகும்.

இதே போல கோவை மாநகரில் உண்ணாவிரதம், தர்ணா போராட்டம் நடத்துவதற்கு டாடாபாத் பகுதி ஒதுக்கப் பட்டு உள்ளது. இதற்கு முன்பு கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

அங்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடத்த தற்போது அனுமதி கிடையாது. ஆனால் அவசர நேரங்களில் சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாநகர போலீசார் தற்காலிகமாக அனுமதி அளிப்பது உண்டு.

இந்த நிலையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மேலும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பிருந்து செஞ்சிலுவை சங்கம் வரை சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது.

அந்த பகுதிக்குள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் கலந்து கொள்பவர்கள் இரும்பு தடுப்புக்குள் நிற்க வேண் டும். அவர்களால் முன்பு போல ரோட்டில் போக்குவரத்து நடைபெறும் பகுதிக்கு குறுக்கே வர முடியாது.

இதனால் சாலையின் மற்றொரு பகுதியில் தடையின்றி வாகன போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

ஆனாலும் ஆர்ப்பாட்டம் முடிந்ததும், அதில் கலந்து கொண்டவர்கள் வெளியே செல்வதற்கும், அவசர தேவைக்காக வெளியே செல்வதற்கும் ஏற்க இரும்பு தடுப்பிற்கு இடையே 8 இடங்களில் சிறிய கேட் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியே செல்ல முடியும்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை தெற்கு தாசில்தார் அலுவலக பகுதியில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது போக்குவரத்து பாதிக்கப் பட்டது. ஆனால் தற்போது போக்குவரத்து பாதிக்காமல் இருக்கவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் வசதியாக சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைக்காக வெளியே செல்ல இரும்பு தடுப்புகளின் நடுவே கேட் அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்