மாவட்டத்தில் கூட்டுறவு, அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.14¼ கோடிக்கு மருந்துகள் விற்பனை அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.14 கோடியே 40 லட்சத்திற்கு மருந்துகள் விற்பனையாகியுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகராட்சி தேரடி வீதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் கூட்டுறவுத் துறை சார்பில் புதிதாக அம்மா மருந்தகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு இணைப்பதிவாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். விழாவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அம்மா மருந்தகத்தை திறந்து குத்து விளக்கேற்றி வைத்தனர்.
இதில் வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் பாரி பா.பாபு, திருவண்ணமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், துணைத் தலைவர் சங்கர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையாளர் பண்டக சாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அம்மா மருந்தகம் குறித்து கூட்டுறவு துறை அலுவலர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலை மூலம் 7 கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் 2 அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்களில் பொது மக்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் அம்மா மருந்தகங்கள் இதுவரை ரூ.14 கோடியே 40 லட்சத்திற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தற்போது இந்த புதிய அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு உள்ளது என்றனர்.