நள்ளிரவில் திருட்டுத்தனமாக தாலிகட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை விரட்டியடித்த வாலிபர் கைது
காதலி்க்கு நள்ளிரவில் திருட்டுத்தனமாக தாலி கட்டி உல்லாசம் அனுபவித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்து அவரை விரட்டியடித்ததால் போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்,
சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்குபட்டு மேல்காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரின் மகன் நவீன்குமார் (வயது 25), சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் சென்னைக்கு ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் சோளிங்கர், கீழ்காலனி பஜனை கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி நவீன்குமார் சென்று வந்து உள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் 9-ஆம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். அப்போது அந்த பெண்ணுடன் நவீன்குமார் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி நவீன்குமார் நள்ளிரவு 12 மணிக்கு அந்த பெண்ணிற்கு போன் செய்து வெங்குபட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அருகே வா என்று அழைத்து உள்ளார்.
நவீன்குமாரின் பேச்சை கேட்டு வெங்குபட்டு கிராமத்திற்கு அந்த பெண் பெற்றோருக்கு தெரியாமல் நள்ளிரவு சென்று உள்ளார். நவீன்குமார், பெண்ணிடம் கோவில் அருகில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி உள்ளார். அப்போது அந்த பெண் இவ்வளவு நாள் உல்லாசமாக இருந்தது போதும். இனி நீ எனக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொள். அதன் பின்னர் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி உள்ளார்.
உடனடியாக நவீன்குமார் கோவில் அருகே அரசமரத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் கயிறை எடுத்து இதோ தாலிக்கயிறு உள்ளது. நான் உனக்கு தாலி கட்டுகிறேன் என்று கூறி அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி உள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பாழடைந்த வீட்டிற்கு நவீன் குமார் உல்லாசமாக இருந்து உள்ளார். காலை 6 மணி வரை இருவரும் அந்த வீட்டிலேயே உல்லாசமாக இருந்து உள்ளனர். இதனிடையே பெண்ணை காணாமல் பதறிப் போன பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து உள்ளனர்.
அப்போது பெண் வெங்குபட்டு கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. பெண்ணின் பெற்றோர் அங்கு வந்து மகள் மற்றும் நவீன்குமார் இருந்த பாழடைந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீன்குமாரிடம் எனது மகளுக்கு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் திருட்டு தாலி கட்டி திருமணம் செய்துள்ளாய். ஆகவே நீ வந்து எல்லோருக்கும் தெரியும் வகையில் மீண்டும் எனது மகளுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு உள்ளனர்.
அதற்கு மறுத்த நவீன்குமார் இந்த சம்பவம் குறித்து யாராவது வெளியில் சொன்னால் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சும்மா விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். பின்னர் தாலி கட்டிய பெண்ணையும், அவரின் பெற்றோரையும் அங்கிருந்து மிரட்டி விரட்டி உள்ளார்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் உமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.