சட்டசபைக்கு தேர்தல் நெருங்கும் நிலையில் பரபரப்பு : மராட்டிய மந்திரி சபை இன்று விரிவாக்கம்
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய மந்திரிகள் யார்- யார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு வருகிற அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி மராட்டிய சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடருக்கு முன்பு மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆதாயத்தை கவனத்தில் கொண்டு இந்த மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் புதிய மந்திரிகள் யார்- யார்? என்பது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் இரவு கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அப்போது யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து முடிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஏற்கனவே நான் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளேன். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லமான மாதோஸ்ரீயில் சந்தித்து மத்திரிசபை விரிவாக்கம் குறித்த தகவல்களை தெரிவித்தேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது மராட்டிய மந்திரிசபையில் முதல்-மந்திரியையும் சேர்த்து 37 பேர் உள்ளனர். இதில் பா.ஜனதாவில் 16 கேபினட் மந்திரிகள் மற்றும் 7 இணை மந்திரிகள் உள்ளனர். சிவசேனா கட்சியில் 5 கேபினட் மந்திரிகள் மற்றும் ஒரு இணைமந்திரி உள்ளார். சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு கேபினட் மந்திரி மற்றும் தலா ஒரு இணை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின் படி இன்னும் 5 பேரை மந்திரிகளாக நியமிக்க முடியும். ஆனால் சில மந்திரிகளை கழற்றி விடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக நில முறைகேடு வழக்கில் சிக்கிய பிரகாஷ் மேத்தா, சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே ஆகியோர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் புதிய மந்திரிகள் யார்- யார்? என்ற தகவல் வெளியானது. இதில் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அவருக்கு வேளாண் துறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலாருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதாவை சேர்ந்த ஜெயந்த் சிர்சாகர், அனில் முண்டே, அதுல் சாகேவ், சஞ்சய் குடே, சஞ்சய் பிகடே, சுரேஷ் காடே மற்றும் சிவசேனாவை சேரந்த உதய் சாவந்த், தானாஜி சாவந்த் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.
மேலும் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த அவினாஷ் மாதேக்கருக்கு மந்திரி சபையில் வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இன்று காலை பதவி ஏற்பு
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நெருங்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுவது அரசியல் பரபரப்பையும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.