மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை, சின்னாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.;

Update: 2019-06-15 22:30 GMT
தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு வனப்பகுதியில் உள்ள சின்னாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றின் மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . அதை தவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டன. இதனால் அணையும் நீர்வரத்தை இழந்து குட்டையாய் காட்சியளித்தது. வன விலங்குகளும் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி அமராவதி அணையை முகாமிட்டு வந் தன. பாசன நிலங்களும் சாகுபடி செய்யப்படாமல் வெறுமனே காட்சி அளித்து வந்தது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வறண்ட நிலையில் காணப்பட்ட சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அதனை சுற்றி உள்ள பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

அணைகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து அமராவதி அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்றைய காலை நிலவரப்படி அணையில் 30.81 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 111 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்