கட்டண பிரச்சினை, பவர் டேபிள் உரிமையாளர்கள் தொடர் போராட்டம் - சைமா சங்கத்தில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

கட்டண பிரச்சினை தொடர்பாக பவர் டேபிள் உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) சைமா சங்க அரங்கில் நடைபெறுகிறது.

Update: 2019-06-15 22:45 GMT
திருப்பூர், 

திருப்பூர் சோளிபாளையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் நடத்தி் வருகிறார். இந்த நிறுவனத்திற்கு திருப்பூர், அவினாசி, பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பவர் டேபிள் நிறுவனத்தினர் ஆர்டர்களின் பேரில் ஆடைகளை தைத்து கொடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான கட்டணத்தை அந்த நிறுவனம் சரியாக வழங்காமல் இருந்து வந்தது. இதனால் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் 4-வது நாளாக நேற்று உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பவர் டேபிள் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.. இந்நிலையில் இந்த பிரச்சினை தொடாபான முத்தரப்பு பேச்சுவார்தை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க துணைச்செயலாளர் முருகேசன் கூறியதாவது:-

சோளிபாளையத்தில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக ஆடைகளை தைத்து கொடுத்து வருகிறோம். தற்போது கட்டணங்களை வழங்காமல் நீண்ட காலம் இழுத்தடித்து வருகிறார்கள். கட்டணங்களை கேட்டும் வழங்கவில்லை. இதனால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்றோடு 4-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த பேச்சுவார்த்தை தாய் சங்கமான சைமா சங்க அரங்கில் நாளை மதியம் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். ஏற்கனவே ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பாதிப்புகளால் தொழில் கடந்த காலங்களை போல் இல்லை. இந்த நேரத்தில் இதுபோன்ற சம்பவங்களும் வேதனையளிக்கிறது. கடந்த 4 நாட்களாக பல லட்சம் ஜட்டி மற்றும் பனியன்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்