நாடாளுமன்ற தேர்தல் தோல்வி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா? - தினேஷ் குண்டுராவ் பதில்

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்திருப்பதாக வெளியான தகவல் குறித்து அவரே பதில் அளித்துள்ளார்.;

Update: 2019-06-15 20:53 GMT
பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று தினேஷ் குண்டுராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி மேலிடத்துக்கு விரிவான அறிக்கை அளித்துள்ளேன். ஆனால் தோல்விக்கு பொறுப்பு ஏற்று மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கட்சி மேலிடத்திற்கு நான் எந்த கடிதமும் எழுதவில்லை.

வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வரும் தகவலை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். எதற்காக இதுபோன்று தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. கட்சி மேலிடம் எனக்கு கொடுத்த பொறுப்பை சரியான முறையில் நிர்வகித்து வருகிறேன்.

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்குவது தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் பகல், இரவாக தொடர் தர்ணா போராட்டம் நடத்துவது தேவையற்றது. இதற்கு முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது ஜிந்தால் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் நிலம் வழங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது பா.ஜனதாவினரே போராட்டத்தில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது.

ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்குவது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலம் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை அரசியலாக்க பா.ஜனதாவினர் முயற்சிக்கின்றனர். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

மேலும் செய்திகள்