2 நாட்கள் விசாரணைக்கு பிறகு போலீசார் நடவடிக்கை, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேர் கைது- 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
2 நாட்கள் விசாரணைக்கு பிறகு ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரை கோவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை வருகிற 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை,
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கர வாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த 12-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தி்ல் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 2 பேரை அவர்கள் கைது செய்தனர். 3 பேருக்கு சம்மன் அனுப்பி கொச்சிக்கு வரவழைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அதன்பேரில் கடந்த 13-ந் தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான்(வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன்(25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்தது.. போலீசாரின் சோதனையில் 3 பேரின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவர்கள் 3 பேரையும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தி்ல் உள்ள நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, 3 பேரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணயில் அவர்கள் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது.
இதைத்தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்றுக்காலை 8 மணியளவில் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39-ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.