ஜோலார்பேட்டையில் பட்டப்பகலில் பீடி கம்பெனியில் ஷட்டர் கதவை திறந்து திருடிய 5 வடமாநில பெண்கள் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்

ஜோலார்பேட்டையில் பூட்டியிருந்த பீடி கம்பெனி அலுவலகத்தின் ஷட்டரை திறந்து திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 5 பெண்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

Update: 2019-06-15 22:15 GMT
ஜோலார்பேட்டை,

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜோலார்பேட்டையை அடுத்த பக்கிரிதக்கா குயில் மண்டி தெரு பகுதியை சேர்ந்தவர் கவுஸ். இவரது மகன் இலியாஸ் (வயது 39) இதே பகுதியில் மசூதி காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு அலுவலகத்தையும் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இலியாஸ் நேற்று மதியம் அலுவலகத்தை மூடிவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் குழந்தையுடன் பீடி கம்பெனி அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டிருந்தனர்.

இலியாஸ் வெளியே சென்றதை அறிந்த அந்த பெண்கள் அலுவலகத்தின் ஷட்டரை திறந்து கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்து 300-ஐ திருடியுள்ளனர். மேலும் அலுவலகத்தின் மாடிக்குச் சென்று அங்கிருந்த ஷட்டரை சிறிதளவு திறந்து குழந்தையை நுழைய விட்டு அங்கிருந்த பீடி பண்டல்களையும் திருடியுள்ளனர்.

இந்த நிலையில் உரிமையாளர் இலியாஸ், அலுவலகத்திற்கு திரும்பியபோது ஷட்டர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது 5 பெண்கள் குழந்தையுடன் உள்ளே இருந்து தப்பி ஓட முயன்ற உள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இலியாஸ் அந்த வடமாநில 5 பெண்களையும் சுற்றிவளைத்து பிடித்தார்.

பின்னர் இலியாஸ் தனது அலுவலகத்தில் பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்து 300 மற்றும் பீடி பண்டல்களையும் அந்த பெண்கள் திருடியது தெரியவந்தது.

இது குறித்து இலியாஸ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் பொதுமக்களின் பிடியில் இருந்த 5 வடமாநில பெண்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள முன்காவாலி மாவட்டம் புராத்பூர் பகுதியை சேர்ந்த லகான் என்பவரின் மனைவி நந்து (21), சான்தோஷ் என்பவரின் மகள் பேபி (20), பாபுலால் என்பவரின் மனைவி சாய்ராய்(55), அசோன் நகர் புத்தரா பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகள் காஜல் ( 20), குணா மாவட்ட பகுதியை ேசர்ந்த அஜய் என்பவரின் மனைவி குகனா(20) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்