குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. வலியுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.பார்த்திபன். இவர், கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
அப்போது, அவரிடம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பொதுமக்கள் 483 மனுக்களை அளித்தனர்.
இந்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அந்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கி, மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ரோகிணி உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கிராமத்திற்கு சென்று நன்றி தெரிவித்தபோது, பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் என்னிடம் கொடுத்தனர். அதாவது, குடிநீர் பிரச்சினை, முதியோர், விதவை உதவித்தொகை என 483 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் வழங்கியுள்ளேன். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
கிராம பகுதிகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே சீரான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை வளர்க்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கால்நடைகளை கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் உள்ள வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, சேலம் மாநகர தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் லட்சுமணபெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.