கொடைரோடு அருகே, மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - பெண் உள்பட 2 பேர் படுகாயம்

கொடைரோடு அருகே மரத்தில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2019-06-15 22:15 GMT
கொடைரோடு,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த முதுகுடியை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர்கள் கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த விபின்குமார் (26), தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை அடுத்த குளத்துப்பாளையத்தை சேர்ந்த மனோகரன் மகள் கோமதி (26).

இவர்கள் 3 பேரும், விருதுநகரில் நடைபெறும் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்தனர். காரை விபின்குமார் ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரின் முன் இருக்கையில் இருந்த சிவா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் விபின்குமார், கோமதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பலியான சிவாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்