விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 60 சிறுவர்கள் - பெற்றோர்களை அழைத்து போலீசார் அறிவுரை

நத்தம் பகுதியில் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 60 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Update: 2019-06-15 22:30 GMT
நத்தம்,

சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நத்தம் பஸ்நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் ஓட்டினால் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 60 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களின் பெற்றோர்களை அழைத்து போலீசார் அறிவுரை கூறினர். மேலும் 18 வயது முடிந்த பின்னரே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்றும், இதை மீறி ஓட்டினால் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்